#BREAKING: பள்ளி திறந்த முதல் நாளே வந்தவாசி பள்ளியில் தீ விபத்து..!!

 
Q
வந்தவாசியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, பள்ளி சமையலறையில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வழக்கம்போல் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக ஊழியர்கள் கேஸ் அடுப்பைப் பற்றவைத்த போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு கசிந்து தீப்பிடித்துக்கொண்டது. இந்த திடீர் விபத்தால் பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.
இதற்கிடையே, விபத்து ஏற்பட்டவுடன் அவசரத் தேவைக்காகப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு உருளை (Fire Extinguisher) வேலை செய்யவில்லை என அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.