#BREAKING இயக்குநர் மோகன். ஜி கைது!

 
G Mohan

பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து  அவதூறு பேசியதாக இயக்குநர் மோகனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  சென்னையில் கைது செய்து அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். 

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில்,  பழனி பஞ்சாமிர்தம் குறித்து சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். அந்தவகையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் பேசிய அவர், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” என்று பேசியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையான நிலையில்,  இயக்குநர் மோகன் ஜி, கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அவர், திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  

mohan G

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ சினிமா இயக்குநர் மோகன் ஜி சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்குக் கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்க்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.