#BREAKING : கேஸ் சிலிண்டர் e-KYC செய்ய காலக்கெடு மேலும் நீட்டிப்பு!
வீட்டு உபயோக சிலிண்டருக்கான E-KYC எனப்படும் சுயவிவரத்தை பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக e-KYC இன்னும் நிறைவு செய்யாத நுகர்வோருக்கு, இன்று வரும் ஆகஸ்ட் 23 தேதிக்குள் சரிபார்ப்பை முடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நுகர்வோர் e-KYC-ஐ ஆன்லைனிலும், நேரடியாகவும் மேற்கொள்ளலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலி மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் Hello BPCL செயலி மூலமாகவும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP PAY செயலி மூலமாகவும் e-KYC செய்யும் வசதி உள்ளது. மேலும், கேஸ் விநியோகிக்கும் நபர் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ சரிபார்ப்பை முடிக்கலாம்.
ஆன்லைனில் e-KYC செய்ய விரும்புவோர், தங்களது கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியில் உள்நுழைந்து e-KYC அல்லது ஆதார் சரிபார்ப்பு வசதியைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஆதார் விவரங்களை உள்ளிட்டு, தேவையான பயோமெட்ரிக் அல்லது முக அடையாள சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். முக அடையாள சரிபார்ப்புக்கு AadhaarFaceRD போன்ற செயலி தேவைப்படலாம். ஏற்கனவே e-KYC முடித்த நுகர்வோர் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் e-KYC செய்யாத நுகர்வோருக்கு சிலிண்டர் முன்பதிவு அல்லது வீட்டு உபயோக விலையில் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மானியம் பெறும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மானியப் பலன்கள் பாதிக்கப்படலாம். சில இடங்களில் e-KYC செய்யாதவர்களுக்கு உள்நாட்டு விலைக்கு சிலிண்டர் பெறும் தகுதி தற்காலிகமாக பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்ட நிலையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.. அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை ஏற்று மத்திய அரசு கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பது வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

