#BREAKING : முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம் : யார் எதிர்ப்பு? யார் ஆதரவு?

 
1

 

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, விசிக, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேநேரத்தில் அதிமுக, பாஜ, பாமக எதிர்ப்பு தெரிவித்தன.இது குறித்து சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசுகையில், '' நிர்வாக வசதிக்காக வாக்காளர் அதிகமுள்ள தொகுதிகளை மறு வரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை; அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது.வரும் லோக்சபா பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டசபை பொதுத்தேர்தலிலும் 3ல் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் தனித் தீர்மானத்தில் வரிசை எண் 3ல் கொடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிக்கிறது,'' என்றார்.

 

உள்நோக்கத்தோடு நாடாளுமன்றம் கட்டப்பட்டது போல் தோன்றுகிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 

முதலமைச்சர் முன்மொழிந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ செல்லச்சாமி, “எந்த மாநில உரிமைகளும் பாதிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. அனைத்துக் கட்சிகளுடன் பேசிய பிறகுதான் இப்படி ஒரு நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காமலேயே புதிய நாடாளுமன்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் ஏதோ ஒரு நோக்கத்தோடுதான் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கக்கூடாது. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது” என்றார்.

 

தமிழ்நாட்டிற்கு 59 எம்.பிக்கள் - பிரேமலதா விஜய்காந்த் சொன்ன கணக்கு

 

டிலிமிட்டேஷனுக்கு எதிரான தீர்மானம் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி ராமசந்திரன், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில குரல்வளை நசுக்கப்படுகிறது. முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனி தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆதரிக்கிறேன். 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தேவை என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை சமமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி என்பதற்கு பதிலாக 7 முதல் 8 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி என நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தமிழ்நாட்டிற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். அதேபோல், பெண்களுக்கான இடஒதுக்கீடு விகிதாச்சாரம் அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

33 சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன். பெண்கள் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியலிலும் அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இந்த அவையில் அதிகளவில் பெண்கள் இடம்பெறுவதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவின் அடிப்படையில் 113 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். 850 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 33 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 215 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்” என்ற பிரேமலதா இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை; எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கவில்லை : 

தீர்மானத்தின் மீது பேசிய பாமக கணேஷ்குமார், “உள்ளாட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுவரையறை செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும்.

தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 20 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவார்கள். முதலமைச்சர் உடனடியாக இந்த தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

செவி வழி செய்தியை வைத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தில் ஒருமனதாக என்ற வார்த்தை இருக்கக்கூடாது. பெண்கள் உரிமை பெறுவதற்கும், பெண்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் எதிரான தீர்மானமாக இது உள்ளது. ஆகையால் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கவில்லை” என்றார்.

விசிக ஆதரவு :

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீது உரையாற்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம். இது தனி தீர்மானம் அல்ல; தனித்துவமான, மகத்துவமான, தென்னிந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டும் தீர்மானம். முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது” என்றார்.

தமிமுன் அன்சாரி ஆதரவு :

தொகுதி மறுவறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனி தீர்மானத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்து பேசினர்.தொகுதி மறுவறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பேசிய ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி, இந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தந்திரம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களைப் போல் தென் மாநிலங்களின் குரல்களும் கவனிக்கப்படாமல் இருக்கவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக  தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்தார். மகளிர் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தனிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.

தி.மு.க ஆதரவு: உதயநிதி ஸ்டாலின் :

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தின் மீது  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தொகுதி மறு வரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது என்று உதயநிதி கூறினார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரை மசோதா தோல்வியடைய தி.மு.க-வின் எதிர்ப்பு காரணம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் எரித்து எதிர்ப்பை காட்டினார்."தி.மு.க காட்டிய எதிர்புதான் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம்" என பா.ஜ.க கூறியது. தொகுதி மறுவரை சட்ட திருத்தத்திற்கான மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரக்கூடும். மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் தொகுதி மறுநிர்ணயம் செய்யப்பட வாய்பு உள்ளது. 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறது, வரவேற்கிறது.” என்று உதயநிதி கூறினார்.

எச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தீர்மானம் - சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படாத நிலையில் ஆதாரமில்லாமல், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் விளக்கமளித்தார்.

“உறுப்பினர் ஆதாரம் இல்லாமல் எதற்காக தீர்மானம் என கேட்டார்கள். ஒரு விஷயத்தில் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதே வேளையில் ஒரு விஷயம் வருவதற்கு முன்பு அதை எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடிவுகளை எடுக்கலாம்.

ஒரு எச்சரிக்கை நடவடிக்கையுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்மானங்களை தமிழ்நாடு நிறைவேற்றி உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து ஒரு எச்சரிக்கை உணர்வோடுதான் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

பிரச்சினை எவ்வாறு வந்தாலும் அதனை அணுகுகிற ஆற்றலும் தெளிவும் திறமையும் முதலமைச்சருக்கு இருக்கிறது. இந்த தீர்மானம் சரியான தருணத்தில்தான் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதுகிறேன்” என்றார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் கொண்டுவந்த தனித்  தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.