#BREAKING : தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணை தலைவர் அதிரடி நீக்கம்.!
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்றாகும்.
இதனிடையே, தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சூழலில், தஞ்சாவூர் தொகுதியானது புதிய நீதி கட்சி அல்லது அதிமுகவுக்கு வழங்கப்படவுள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இதனால் அதிருப்தியடைந்த தஞ்சை தெற்கு பாஜக மாவட்ட துணை தலைவர் முரளிதரன், தலைமையின் உத்தரவின்றி, (மார்ச் 30) பாஜக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தஞ்சாவூரில் தாமரையில் மலர வேண்டும் என்பதே அனைத்து பாஜகவினரின் விருப்பம். மற்ற கட்சிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்கிறார்கள். எங்கள் தொண்டர்கள் எல்லாம் சோர்வடைந்திருக்கிறார்கள். ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. அதனால் முடிவெடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, தொண்டர்களை திருப்திப்படுத்த சுயமாக முடிவெடுத்துள்ளேன். ஒரு பள்ளியில் ஆசிரியர் வரவில்லை என்றால், மாணவர் தலைவன் எப்படி வகுப்பை கட்டுப்படுத்த முயற்சி செய்வானோ, அதே போலதான் இதுவும். இங்கு வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். தலைமை என்ன சொன்னாலும் கட்டுப்படுவோம்” என தெரிவித்தார்.
ஒருவேளை இத்தொகுதியை வேறு கட்சிக்கு வழங்கிவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, “ஒருவேளை மற்றவர்களுக்கு கொடுத்தால், வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்வேன்” என பதிலளித்தார்.
பாஜக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரன் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தன்னிச்சையாகச் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, முரளிதரனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

