#BREAKING : பெரம்பலூர் அருகே கோர விபத்து: நடிகை தேவி பிரியா உயிர் தப்பினார் - கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், இந்த விபத்தில் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னத்திரை சீரியல்கள் மற்றும் டப்பிங் கலைஞராகப் புகழ்பெற்ற நடிகை தேவி பிரியா, தனது உதவியாளர் திவாகர் மற்றும் ஓட்டுநர் முத்து கணேஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருச்சி நோக்கித் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, காரின் டயர் திடீரென பஞ்சராகியுள்ளது. இதையடுத்து, சாலையோரம் காரை நிறுத்திய ஓட்டுநர் முத்து கணேஷ், டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். நடிகை தேவி பிரியா மற்றும் அவரது உதவியாளர் காரின் அருகே நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம், நிலைதடுமாறி பஞ்சராகி நின்றிருந்த தேவி பிரியாவின் கார் மீது பலமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் கார் உருக்குலைந்தது.
டயரை மாற்றிக் கொண்டிருந்த ஓட்டுநர் முத்து கணேஷ் மீது வாகனம் நேரடியாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.விபத்து நடந்த நொடியில் சற்று தள்ளி நின்றிருந்த நடிகை தேவி பிரியா, எவ்வித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உதவியாளர் திவாகர், உடனடியாக மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த முத்து கணேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

