#Breaking: நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்..
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக திரையுலகில் வெற்றி கண்டவர் நடிகர் சத்யராஜ். தொடர்ந்து குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து நீண்ட காலமாக நடிப்புலகில் அசத்தி வருகிறார். நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வரும் சத்யராஜ், நிஜ வாழ்க்கையில் பெரியாரின் கொள்கைகளை விரும்புபவர். அதன் காரணமாகவே ‘தந்தை பெரியார்’ படத்தில் ஊதியமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கோவை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் சத்யராஜ். அவரது தாயார் நாதாம்பாள் கோவையிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவே அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு சத்யராஜ் ஒரே மகனாவார். மேலும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே படப்பிடிப்புக்காக நடிகர் சத்யராஜ் ஹைதராபாத்தில் இருந்த நிலையில், தாயாரின் மறைவு குறித்து அறிந்து கோவைக்கு விரைத்துள்ளார். அவரது தாயாரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சொந்த ஊரான, கோவையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


