#BREAKING தீபாவளி பண்டிகையை ஒட்டி 14,086 சிறப்பு பேருந்துகள்..
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 28 முதல் 30 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன் 4,900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12,606 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்தாண்டு, மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மார்க்கம், திருச்சி மார்க்கம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை மார்க்கம், திருநெல்வேலி மார்க்கம், சேலம், கோயம்புத்தூர் மார்க்கம், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கம், கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கம்.
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை மார்க்கம், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மார்க்கம், திருத்தணி மார்க்கம்.
மாதவரம் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கம் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் செல்லும்.
வருகிற 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையன் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது.
மேலும், தீபாவளி பண்டிகை முடிந்து நவ.2, 3, 4 ஆகிய தேதிகளில் பலரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். சாதாரண நாட்களில் இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 3,165 சிறப்பு பேருந்துகளுடன், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3,405 பேருந்துகள் என மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட உள்ளது “ என கூறினார்.
மேலும், “இந்த ஆண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்காக சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள் என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தீபாவளி பண்டிகை குறித்து வரும் 24 ஆம் தேதி ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை சார்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல, தீபாவளி பண்டிகைக்கு தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளை எடுத்து அரசு ஸ்டிக்கர் ஒட்டி அரசு சார்பில் இயக்கப்பட்டும்" என தெரிவித்தார்.