"சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்கவே காலை உணவுத் திட்டம்" - ஜெயக்குமார் காட்டம்

 
jayakumar


எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்கவே திமுக காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று சென்னையில் அனுசரிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் மூப்பனார். 22 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது என்றால், தமிழகத்திற்கு அந்தளவுக்கு நல்லது செய்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசை நிர்பந்தித்து தமிழகதிற்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

 தன்னுடைய குடும்ப சொத்தை, தஞ்சாவூர் ரயில் பாதைக்கு கொடுத்தவர். அமைச்சர் பதவி வேண்டும் என்று தற்போது ஒரு சில கட்சிகள் இருக்கும் நிலையில், 3 பிரதமர்களை உருவாக்கும் வல்லமை படைத்து இருந்தவர் மூப்பனார். இவர் பிரதமராக வாய்ப்பு வந்தபோது திமுக அதனை தடுத்தது. ஆனால் இறுதி வரை திமுக மேல் குற்றம் சுமத்தாமல் இருந்தவர் மூப்பனார். அவருடைய வழியில் அவரது மகன் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.  

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் :

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது திமுக அரசு. காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுக ஆட்சியில் தான். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதே இந்த திட்டம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.  அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமில்லை.  மேலும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.  எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை” என்றார்.