திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் நான்கு மாடவீதியில் நாதஸ்வர இசைக்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஊர்வலத்தில் பக்தர்கள் கோலட்டம் பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர்.
பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதின் மூலம் சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று முக்கோடி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி கோயிலுக்கு கொண்டு சென்று ஏழுமலையானுக்கு சமர்பித்தார்.
பின்னர் சுவாமி தரிசனம் செய்த முதல்வர் ஜெகன் மோகன் தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்காண கலெண்டர் மற்றும் டைரிகளை வெளியிட்டார். இதனைதொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வீதி உலாவில் போது நான்கு மாடவீதியில் இருப்புறமும் திரண்டு இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்க கற்பூர ஆரத்தி எடுத்தும் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி வீதி உலாவிற்கு முன்னதாக இந்து தர்ம பிரச்சார பர்ஷித், அன்னமாச்சார்யா, தசா சகீத்திய திட்டத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடிய படியும் பஜனைகள் செய்தும் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள் பாலிக்கவுள்ளார். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் 26 ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.