தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன் தூக்கிட்டுத் தற்கொலை

 
ட

தாம்பரம் ரயில் நிலையத்தில்  கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காதலன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.  என்ஜினியரிங் படித்துவிட்டு சென்னை மறைமலை நகர் பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.  அப்போது குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சுவேதா என்ற கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  இரண்டு வருடங்கள் காதலித்து வந்துள்ளார்.  அதன் பின்னர் சுவேதா திடீரென்று ராமச்சந்திரன் உடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். ஏன் இந்த விலகல். இது குறித்து பேச வேண்டும் என்று சுவேதாவை அழைத்திருக்கிறார் ராமச்சந்திரன்.

டம்

 அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தன் தோழி சங்கீதாவுடன் கிழக்கு தாம்பரம் ரயில்வே காலனி பகுதிக்கு சென்று இருக்கிறார் சுவேதா.  அங்கே நீண்ட நேரமாக ராமச்சந்திரனும் சுவேதாவும் பேசியிருக்கிறார்கள்.  இந்த பேச்சின் போது ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன்,  தான் முன்கூட்டியே திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி இருக்கிறார்.   இதில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் ஸ்வேதா துடி துடித்து உயிரிழந்திருக்கிறார்.  உடனே,  தனது கழுத்தையும் தனக்குத் தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் ராமச்சந்திரன். 

 தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டதில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார் ராமச்சந்திரன்.  குரோம்பேட்டை போலீசார் சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ராமச்சந்திரனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினார்கள். 

 பின்னர் ராமச்சந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை சிறையில் அடைத்தனர்.  ஓராண்டு சிறையில் இருந்த ராமச்சந்திரன் அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்த கொலை தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்த வழக்கின் விசாரணையில் நேற்று  ராமச்சந்திரன் ஆஜராக வேண்டியது இருந்தது.

 இந்த நிலையில் நேற்று முதல் நாள் இரவு தன் சொந்த ஊரில் அவரின் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  தகவல் அறிந்த வலிவலம் போலீசார் ராமச்சந்திரன் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  தற்கொலை குறித்த வழக்குப் பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.