இன்ஸ்டா காதலால் விபரீதம்! குளத்தில் குதித்த காதலர்கள்... காதலன் மரணம்
திருவாரூர் அருகே காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக காதலன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மருதப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (23). பிபிஏ படித்துள்ளார்.இதேபோல் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (19). அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இருவரும், இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலை நிறுத்திக்கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பிரவீன் நேரில் பேசி முடிவு செய்யலாம் என அழைத்துள்ளார். இதையடுத்து கும்பகோணத்திலிருந்து பைக்கில் திருக்கண்ணமங்கை பகுதிக்கு வந்த இருவரும் அங்கிருந்த சேட்டாக்குளம் அருகே அமர்ந்து பேசினர். இதில், காதலை முறித்துக்கொள்வதில் ஜெயஸ்ரீ பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால், ஏமாற்றமடைந்த பிரவீன் திடீரென குளத்தில் குதித்தார்.
இதைக்கண்ட ஜெயஸ்ரீயும் குளத்தில் குதித்து போராடியதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். ஜெயஸ்ரீ பத்திரமாக மீட்டனர். இதில் பிரவீன் குமார் மூச்சு பேச்சு இன்றி இருந்ததன் காரணமாக உடனடியாக சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜெயஸ்ரீ அவரது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


