“சாக பயந்த நாய்”... என காதலி திட்டியதால் காதலன் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காதலி செல்போனில் திட்டியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதி அடுத்த பாப்பன்விடுதி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மனோஜ் குமார் (27). இவர் அதே ஊரைச் சேர்ந்த தென்னரசு என்பவரின் மகளான பாலதரிஷனி என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஒருவருக்கு ஒருவர் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்ட போது பாலதரிஷனி மனோஜ் குமாரை, 'சாக பயந்த நாய் என்ன பண்ணுது பாரு.. நான் இப்ப போனை சுவிட்ச் ஆப் செய்கிறேன், காலையில நியூஸ் வரும் இல்ல! அப்ப நான் தெரிஞ்சுக்கிறேன்' என்று திட்டி மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த மனோஜ் குமார் அந்த மெசேஜை நள்ளிரவு 1:30 மணிக்கு மனோஜ் குமாரின் சகோதரரான உருமையா என்பவருக்கு அனுப்பி உள்ளார். பின்னர் விடியற்காலையில் உருமையா எழுந்து மனோஜ் குமார் அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து அவருக்கு அழைத்த போது மனோஜ் குமாரின் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அவருடன் பணி செய்யும் தர்மா என்பவரை தொடர்பு கொண்டு பேசி நடந்தவற்றை கூறி மனோஜ் குமாரை தேடி பார்க்க கூறியுள்ளார். இதனை அடுத்து தர்மா மனோஜ் குமாரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தபோது கறம்பக்குடி தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள கருவை மரத்தில் வேஷ்டியால் தூக்கிட்டு மனோஜ் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தர்மா மனோஜ் குமாரின் சகோதரர் உருமையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனோஜ் குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காதலி திட்டியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


