மதுரையில் ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்! போலீசாரின் அதிரடி சேசிங்

 
kidnap

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட, 14 வயது சிறுவனை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவருக்கு மதுரை பைபாஸ் சாலை பகுதியில் வணிக வளாகம், வீடுகள் உள்ளது. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை கும்பல் ஒன்று கடத்தி சென்றது. பின்னர் மைதிலி ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி பணம் கொடுத்தால்தான் மகனை விடுவிப்போம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட மைதிலி, இச்சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார், சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை விரட்டிச் சென்றனர். போலீசார் நெருங்கி வருவதை அறிந்த கடத்தல் கும்பல், சிறுவன், ஆட்டோ டிரைவரை நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பியோடியது. உடனே சிறுவனை மீட்ட போலீசார், தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

மதுரையில் சினிமா பாணியில் நடைபெற்ற ஆள்கடத்தல் சம்பவத்தில் அதிரடியாக களத்தில் இறங்கி 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.