வகுப்பறையில் திடீரென முகம், வயிறு வீங்கி சிறுவன் மரணம்..! உறவினர்கள் சாலை மறியல்..!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் - தீபலட்சுமி தம்பதி. இவர்களது மகன் மிதுன் (7). இவர் காவனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.23) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மிதுன், மதிய உணவு இடைவெளியில் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வகுப்பறைக்குச் சென்ற மிதுன் திடீரென முகம் வீங்கி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம், இது குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முதற்கட்டமாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவரின் பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில், மாணவர் மிதுன் 11.30 மணி ஸ்னாக்ஸ் நேரத்தில் வீட்டில் இருந்து கொண்டு வந்த கேக் மற்றும் மதிய உணவு நேரத்தில் இட்லி சாப்பிட்டது தெரிய வந்தது. மேலும், மாணவர் சாப்பிட்ட அந்த கேக் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக தாமரைப்பாக்கத்தில் உள்ள பேக்கரியில் வாங்கியதும், அதனை பிரிட்ஜில் வைத்திருந்து நேற்று ஸ்னாக்சிற்காக மிதுன் மற்றும் அவரது அக்காவிற்கு பெற்றோர் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
மேலும், இதுகுறித்து சிறுவனின் அக்கா போலீசாரிடம் தெரிவிக்கையில், ‘கேக்கை நான் உட்கொண்டதும் அதில் துர்நாற்றம் வீசியதால், மீதமிருந்ததை உட்கொள்ளாமல் கீழே வீசிட்டேன்’ என தெரிவித்தார்.
இதனால் சதேகமடைந்த போலீசார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் உதவியோடு மாணவரின் வீட்டிற்குச் சென்று அவர் சாப்பிட்ட கேக்கை ஆய்வு செய்தார். இதில், அந்த கேக் காலாவாதியானது உறுதி செய்ததையடுத்து சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்றனர்.
இதற்கிடையே, பேக்கரியின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் அவரை தொடர்பு கொண்டு வரவழைத்து பேக்கரியில் இருந்த கேக்கை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வுக்காக எடுத்துச் சென்றார். தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை கடையை அவர் தற்காலிகமாக பூட்டி சீல் வைத்துள்ளார்.
இந்நிலையில் மிதுனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க மறுத்துத் தாமரைப்பாக்கத்தில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


