சிறு விளையாட்டு அரங்கங்களும், கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமி

 
tn

முதலமைச்சர் ஸ்டாலின் சிறு விளையாட்டு அரங்கங்கள், கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமி மற்றும் தென்காசியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2023) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 23 கோடியே 13 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் தங்கும் விடுதி, உள்விளையாட்டு அரங்கம், செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் 5 நபர் அணிகளுக்கான செயற்கை இழை ஹாக்கி மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்து, 9 சட்டமன்றத் தொகுதிகளில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களும், கோபாலபுரத்தில் 7.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்துச்சண்டை அகாடமியும், தென்காசி மாவட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் ஆகிய விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் (Sports Quota) மூன்று விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

tn

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த பாரா தடகள வீரர் திரு.எஸ்.மனோஜ் அவர்கள் இந்தோனேசியாவில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றமைக்காவும், ஜெர்மனியில் 28.07.2023 முதல் 5.08.2023 வரை நடைபெற்ற உலக உயரம் குன்றிய மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றமைக்காகவும், விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த தடகள வீரர் திரு.ஆனந்தன் அவர்கள் அரியானா மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 18வது தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் இரு இடங்களில் வெற்றி பெற்றமைக்காகவும், இந்தோனேசியாவில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2-ம் மற்றும் 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றமைக்காகவும் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இளநிலை அலுவலராக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

tn

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த தடகள் வீராங்கணை செல்வி.ரோஸிமீனா அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 24வது ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள் சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றமைக்காகவும், அதே ஆண்டு ஜுன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 60வது தேசிய அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் 3-ஆம் இடம் பெற்றமைக்காகவும் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இளநிலை அலுவலராக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விளையாட்டு வீரர்கள் திரு.எஸ்.மனோஜ், திரு.ஆனந்தன் மற்றும் செல்வி.ரோஸிமீனா ஆகியோருக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.