புத்தக கொள்முதல் முறைகேடு- புதிய ஐபிஎஸ் அதிகாரியை நியமித்த ஐகோர்ட்
பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் நடந்தமுறைகேடுகளை ஆய்வு செய்ய தீயணைப்புதுறை டிஜிபி வெங்கட்ராமனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை கண்காணிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அதன் நகலை காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
நூலகங்களுக்காக ரூ.1,645-க்கு வாங்கப்பட்ட புத்தகம் குப்பை போல் இருப்பதாக கருத்து கூறிய நீதிபதி, நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டியுள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐபிஎஸ் அதிகாரி ஜி.வெங்கட்ராமனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி
நூல் கொள்முதல் தொடர்பாக திமுக நிர்வாகி பரந்தாமனை விசாரிக்க உத்தரவிட்டார். அப்போது போலீஸ் தரப்பில் ‘பரந்தாமனுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அடுத்த வாரம் அவர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டது. வெங்கட்ராமன் தனது முதல் அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

