"பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெறுக" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

 
gk vasan

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு பத்திரப்பதிவில் உயர்த்திய கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது. தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றி வருவது நியாயமில்லை. குறிப்பாக ஏற்கனவே மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என்று நடைமுறைப்படுத்தி வருவதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

gk
தொடர்ந்து தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதும் ஏற்புடையதல்ல. தமிழக அரசின் அரசாணையின்படி 5 ரூபாயாக இருந்த கட்டணம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டதும், 30 ரூபாயாக இருந்த கட்டணம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டதும் உள்ளிட்ட 25 வகையான சேவைகளுக்கு பத்திரப்பதிவில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பு அடைகிறார்கள். மேலும் தமிழக அரசு வழிகாட்டி மதிப்பை சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தி வசூலிப்பதும் மக்கள் விரோதப்போக்கு. அதாவது 2017 ஆம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழக அரசு வசூல் செய்வது முறையற்றது. அதே போல தமிழக அரசு வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்த முடிவு எடுத்திருப்பதாக வரும் செய்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தமிழக அரசு அரசுக்கு வருவாயைப் பெருக்க பத்திரப்பதிவில் கட்டணத்தை உயர்த்தி, மக்கள் மீது கட்டண உயர்வை திணிப்பது மக்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.பத்திரப்பதிவில் கட்டணத்தை உயர்த்தி, மக்களை வருத்தி, வருவாயை ஈட்ட நினைப்பது தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

gk
தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டுமென்றால் மக்கள் ஏற்கனவே பொருளாதாரச் சுமையில் இருக்கின்ற வேளையில் மாற்று வழியில் வருவாயை ஈட்ட முயற்சி செய்யலாம். எனவே தமிழக அரசு பத்திரப்பதிவில் உயர்த்திய கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவும், வழிகாட்டி மதிப்பை உயர்த்தக்கூடாது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.