“ஐடி கம்பெனி, காங்கிரஸ் அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்”- மின்னஞ்சலால் பரபரப்பு

 
ச் ச்

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்பட 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

 சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவன், நுங்கம்பாக்கத்தில் ஜிஎஸ்டி பவன்,சேத்துப்பட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவாரம் வீடு,மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, அசோக்நகரில் வசிக்கும் யுடியூபர் கிஷோர் கே.சாமி வீடு,கோடம்பாக்கத்தில் பிடிஐ பத்திரிக்கை அலுவலகம், தேனாம்பேட்டை கேபி தாசன் உள்ள வங்கதேசத்தின் தூதரகம், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவன அலுவலகம், துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்பட 12  இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மின்னஞ்சலை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உயர் அதிகாரிகள், 12 இடங்களிலும் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களும், போலீஸாரும் அங்கு சோதனை செய்தனர். அங்கு நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார், விசாரணை செய்கின்றனர்.