திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

 
1

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணித்து வருவதோடு, சரக்கு விமானங்கள் மூலம் சரக்கு போக்குவரத்தும் நடைபெறுகிறது. தென் தமிழகத்திற்கு செல்லும் விமான பயணிகள் பலரும் திருச்சியில் இறங்கி பின்னர் அங்கிருந்து பேருந்துகள் அல்லது கார்கள் மூலம் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா என்பதை சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இங்கு திறந்து வைத்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என பேஸ்புக் மூலம் திடீரென மிரட்டல் விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் புரளியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.