பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - இண்டர்போல் உதவியை நாடும் காவல்துறை!!
சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாநகர், முகப்பேர், பாரிமுனை, ஓட்டேரி, கோபாலபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிகளில் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக, இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது . மர்ம நபரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயன்று வரும் நிலையில், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி| மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.