தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - திருச்சியில் பரபரப்பு..

 
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - திருச்சியில் பரபரப்பு.. 

திருச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து ,  முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி என்னும் இடத்தில்  இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், மின்னஞ்சல் வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - திருச்சியில் பரபரப்பு.. 

பள்ளிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் தாளாளருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது.  பின்னர் பள்ளி தாளாளர்  இதுகுறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில்  பள்ளிக்கு சென்ற ராம்ஜி நகர் போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தியதோடு,  வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். 
 
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? , எதற்காக அவ்வாறு அனுப்பினார்கள் என்பது குறித்து ராம்ஜி நகர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து வெளியேற்றும் படி உத்தரவிட்ட  ஆர்.டி.ஓ.  தட்சிணாமூர்த்தி, சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.