மதுரையில் தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்டத்தில் உள்ள 4 நட்சத்திர தங்கு விடுதிகளுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 5 பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நேரில் சென்று பள்ளி வளாகம் முழுவதிலும் சோதனை நடத்திய போது அதில் எந்த வெடிகுண்டு பொருட்களும் சிக்கவில்லை. இந்நிலையில் காந்திஜெயந்தி தினமான இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 4 நட்சத்திர தங்க விடுதிகளுக்கு இன்று காலை இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை சின்னசொக்கிகுளம், காளவாசல், பெரியார்பேருந்து நிலையம், பெருங்குடி ஆகிய 4 நட்சத்திர தங்கு விடுதிகளுக்கு நேரில் சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் காவல்துறையினர் உதவியுடன் தங்கு விடுதிகளில் உள்ள பைப் லைன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் 4 நட்சத்திர தங்கு விடுதிகளிலும் எவ்வித வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக இது போன்ற மிரட்டல் இ-மெயில்கள் செல்போன் மூலமாகவா? அல்லது கணிணி மூலமாக அனுப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் I.P முகவரி மூலமாக பயன்படுத்தப்பட்டதா? VPN மூலமாக பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது போன்ற இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிவதில் காவல்துறையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் அனுபவம் வாய்ந்த சிறப்பு தனிப்படை அதிகாரிகளை நியமித்து மிரட்டல் கும்பலை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்


