எல். முருகனை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்
பழனிக்கு வந்த பாஜக எல். முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள், அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டார். எல்.முருகன் பழனி வந்ததை அறிந்த பாஜக தொண்டர்கள் இளைஞரணி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் புலிப்பாணி ஆசிரமம் முன்பு திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறுவதற்காக எல். முருகன் வந்தபோது பாஜக தொண்டர்கள் எல். முருகனை முற்றுகையிட்டனர். பழனி தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பு பெற்று தரவில்லை எனக் கூறி எல். முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக வலுவில்லாத தொகுதிகளை பெற்று கொடுத்துள்ளதாகவும், தொகுதியில் வேலை செய்த தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக முருகனிடம் கூறினர். பழனி தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு பெற்றுத் தரவில்லை என்றால் அனைவரும் கட்சியில் இருந்து விலகப் போவதாக எல்.முருகனிடம் எச்சரிக்கை விடுத்தனர். தொண்டர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத எல். முருகன் காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.
உடனடியாக எல். முருகனின் காரை மறித்து தரையில் அமர்ந்த பாஜக தொண்டர்கள் எல்.முருகனை வெளியே செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகிகள் நீண்ட நேரம் சமாதானப்படுத்தியும் தொண்டர்கள் சமாதானம் ஆகாத நிலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக முருகன் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் காரிலேயே அமர்ந்திருந்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூறியதை அடுத்து எல். முருகன் காரை வெளியே செல்ல தொண்டர்கள் அனுமதித்தனர். ஒன்றிய இணையமைச்சர் எல். முருகனை பாஜகவினர் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது. பழனி தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் ஏற்கனவே கட்சி தலைமைக்கு எதிராக தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பழனி வந்த பாஜக ஒன்றிய இணை அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.

