கோவையில் பாஜக கொடி அகற்றப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
கோவை செட்டிபாளையம் அருகே பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட வசந்தராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அதிமுக, பாஜக, இந்து முன்னணி மற்றும் ஓராட்டு குப்பை செட்டிபாளையம் பாரம் தூக்கம் தொழிலாளர்கள் சங்கத்தின் கொடிக்கம்பம் என நான்கு கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் அனிதா, சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் வருவாய் துறை ஆய்வாளர் லாரன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் சுஜி உள்ளிட்டோர் முன்னிலையில் கொடி கம்பங்களை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் தலைமையிலான பாஜகவினர், பாஜக கொடிக் கம்பங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பினர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பாஜக, அதிமுக, இந்துமுன்னனி மற்றும் ஓராட்டுகுப்பை பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம் என நான்கு கொடிக்கம்பங்களும் பத்திரமாக அங்கிருந்து அகற்றப்பட்டது. கொடிக்கம்பங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.