பேரணிக்கு செல்லவிடாமல் வீட்டுக் காவல்- பாஜக மகளிர் அணி தலைவி கதறல்
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜக சார்பில் நீதிப்பேரணி நடத்த திட்டமிருந்த அக்கட்சியின் மகளிர் அணி தலைவி உட்பட அனைவருக்கும் வீட்டுக்காவல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் இன்று நீதிபேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இப்பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்! நீதி கேட்டு பேரணி செல்ல அனுமதி இல்லை மீறி செல்வோம் என்றவுடன் வீட்டுக் காவல்.....குற்றவாளிக்கு துணைபோகும் கேடு கெட்ட திமுக அரசு இன்று எங்கள் மகளிரணி நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்துள்ளது.....வன்மையாக கண்டிக்கிறேன்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.