"விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்"- வானதி சீனிவாசன்

 
வானதி

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

a

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், "பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி வந்தனர். 

தவெக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், "கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்" என அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில்தான், பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்பதும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு எனது ஆட்சியில் யாரும் தப்பிவிட முடியாது" என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏவைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான முதலமைச்சரை, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முதலமைச்சரே பாதுகாக்க முயற்சித்தது அம்பலமாகிவிட்டதால், இந்த வழக்கை அவரது தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.