பள்ளி கழிவறையில் போதைப் பொருட்கள் கண்டெடுப்பு! மாணவர்களுக்கு இவை எங்கிருந்து கிடைத்தது?- வானதி சீனிவாசன்

 
ச்

பள்ளிகளைச் சுற்றி புகையிலைத் தடை பகுதி என்பது பெயரளவுக்குதான் உள்ளதா? எழுதுகோல் பிடிக்க வேண்டிய கைகளில் இதுபோன்ற போதைப் பொருட்கள் எப்படி வந்தது? குறிப்பாக மாணவர்களுக்கு இவை எங்கிருந்து கிடைத்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வானதி

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே பள்ளி கழிவறையில் மோதல் ஏற்பட்டதும், பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்க வேண்டிய புனித இடமான பள்ளியிலேயே போதைப் பொருள் புழக்கம், அடிதடி கலாசாரம் உருவாகி வருவது மாணவர்களின் எதிர்காலத்தையே சிதைக்கும் ஆபத்தான சூழல் ஆகும். ஏற்கனவே பள்ளிகளை ரீல்ஸ் ஸ்பாட்டாக மாற்றிய தவெக அரசின் அலட்சியத்தில், தற்போது போதைப் பொருட்களும் மாணவர்களிடம் சர்வ சாதாரணமாகச் சென்றடைவது கடும் கண்டனத்திற்குரியது.

பள்ளிகளைச் சுற்றி புகையிலைத் தடை பகுதி என்பது பெயரளவுக்குதான் உள்ளதா? எழுதுகோல் பிடிக்க வேண்டிய கைகளில் இதுபோன்ற போதைப் பொருட்கள் எப்படி வந்தது? குறிப்பாக மாணவர்களுக்கு இவை எங்கிருந்து கிடைத்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, பள்ளி வளாகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.