அறவழியில் போராடும் நாங்கள் வீட்டுக் காவலில் கைதாக வேண்டுமா?- வானதி சீனிவாசன்
பெண்களின் ஜனநாயக உரிமைகளை இரும்புக்கரம் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடக்குவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு நீதி கேட்டும், அக்குற்றத்தை அரங்கேற்றிய தனது கட்சிக்காரர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிக்கும் உங்கள் திமுக அரசின் அதிகார அகம்பாவத்தைக் கண்டித்தும் அறப் பேரணி நடத்தவிருந்த தமிழக பாஜக மகளிரணியின் முக்கிய நிர்வாகிகளை வீட்டுச் சிறை பிடிப்பது, காரணமின்றி கைது செய்வது போன்ற உங்கள் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது முதல்வரே.
பாஜக மகளிரணியின் அறப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு ! அவசர கதியில் அவர்களை வீட்டு சிறை வைப்பு ! பெண்களின் ஜனநாயக உரிமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் தமிழக முதல்வர் திரு. @mkstalin !
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 3, 2025
அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறைக்கு நீதி கேட்டும், அக்குற்றத்தை…
ஆக, உங்கள் திராவிட மாடல் ஆட்சியில் பல குற்றச்செயல்கள் புரிந்து சட்டத்தின் முன் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் சுதந்திரமாக எங்கும் சுற்றித் திரியலாம், ஆனால் எங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அமைதியாக அறத்தின் வழிநின்று போராடும் நாங்கள் வீட்டுக் காவலில் கைதாக வேண்டுமா? தமிழகப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாமல், தமிழகத்தில் நிகழும் கொலைக் குற்றங்களைத் தடுக்க வழி தெரியாமல், உங்கள் விடியா ஆட்சிக்கு எதிராக எழும் கண்டனக் குரல்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பது பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரே, தமிழகப் பெண்களின் உரிமைக் குரல்களை உங்கள் சர்வாதிகாரம் கொண்டு நெரிக்க முற்படும் உங்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.