“விஜய் தனது ‘ஈகோ’வை கைவிட்டு பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளிவிடும் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும். பரந்தூரிலேயே விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளிவிடும் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு
“சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசால் கைவிடப்படும். விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்” என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது கடும் கண்டனத்திற்குரியது. பொருளாதார வளர்ச்சியில், நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு, புதிய விமான நிலையம் என்பது மிகமிக அத்தியாவசியமானது. ஏற்கெனவே பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்கள், சென்னை விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. ஒரு அரசால் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பகுதி நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அந்தத் திட்டத்தைக் கைவிடுவது மிக மோசமான முன்னுதாரணமாகும். இவ்வாறு செய்தால், தமிழ்நாட்டில் முதலீடு செய்தால், ஆட்சி மாறியதும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடியாது என்ற அச்சம் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும். இது தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை வெகுவாகப் பாதிக்கும். தற்போது அனைத்து மாநிலங்களுமே போட்டிபோட்டுக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு வலைவீசி வருகின்றன. இந்தச் சூழலில், விஜய் அரசின் செயல்பாடு என்பது, இருக்கும் முதலீட்டாளர்களையும் வெளியேற்றிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.
புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் 6,000 ஏக்கர் நிலம் கிடைப்பது கண்டிப்பாக சாத்தியப்படாது. விமான நிலையம் அமைக்கப் புதிய இடத்தைத் தேர்வு செய்து அறிவித்தால், அங்கும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள். அந்தப் போராட்டம் பரந்தூரைவிட மிகவும் வீரியமானதாகவே இருக்கும். எனவே, “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடினோம்” என்ற ஒரே காரணத்திற்காக அந்தத் திட்டத்தை ரத்து செய்வது சரியானது அல்ல. எனவே, முதலமைச்சர் விஜய் தனது ‘ஈகோ’வை கைவிட்டு, பரந்தூரிலேயே விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தைத் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். புதிய விமான நிலையம் அமைக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். அந்த இடங்களின் விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும். புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் அமைக்கப்படும் வரை, தற்போது உள்ள சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதனால், சென்னைக்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு புதிய விமான நிலையம் வராது என்ற அச்சம் தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும். பரந்தூரிலேயே விமான நிலையத்தை அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

