சமூக நீதி விடுதிக்குள் நுழைந்து பலாத்காரம்- வானதி சீனிவாசன் அதிர்ச்சி

 
வானதி

சேலம், வாழப்பாடி அருகே செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதியில் தங்கிப் பயிலும் 2 சிறுமிகள் வெளிநபர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், வாழப்பாடி அருகே செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதியில் தங்கிப் பயிலும் 2 சிறுமிகள் வெளிநபர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. விடுதியில் பணிபுரிவர்களே இதற்கு உடந்தையாகச் செயல்பட்டு சிறுமிகளிடம் அத்துமீற வைத்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மாணவிகள் விடுதியில் சம்பந்தம் இல்லாத வெளி நபர் ஒருவரை அனுமதித்ததன் அடையாளமாக இன்று இரண்டு சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. 

தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இன்று விடுதியில் பயிலும் பள்ளிச் சிறுமிகளையே சீரழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முற்றிலும் அக்கறையின்மையையே காட்டுகிறது. தினந்தோறும் சிறார்களுக்கும், பெண்களுக்கும் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்தாவது அரசு விழிக்க வேண்டாமா? இன்னும் இதுபோன்ற கொடுமைகளை எத்தனைநாள் பார்த்துக் கொண்டிருப்பது முதல்வர் அவர்களே.. 
சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து அங்கே சமூக அவலங்கள் அரங்கேறுவது வெட்கக் கேடு. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகளில் வெளிநபர்கள் நுழைவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.