“வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு”- வானதி சீனிவாசன்
வந்தே மாதரத்தை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பதற்கு சமம் என பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.
வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலைப் பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றைச் சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது. ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடையச் செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

