“தமிழக மகளிரை நீங்கள் தவறாக எடை போடுகிறீர்கள்”- வானதி சீனிவாசன்
பற்றி எரியும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளையும் வெறும் ரூ. 5000 பண நோட்டுகளால் மூடி மறைத்து விடலாம் என நீங்கள் நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக மகளிரை நீங்கள் தவறாக எடை போடுகிறீர்கள் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே! திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும், பற்றி எரியும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளையும் வெறும் ரூ. 5000 பண நோட்டுகளால் மூடி மறைத்து விடலாம் என நீங்கள் நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? உங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகம் முதல் சாதாரண அரசுப் பள்ளிகள் வரை திமுக உடன்பிறப்புகள் பெண்கள் மீது நடத்திய பாலியல் வேட்டைகளின் சுவடுகளை பணத்தால் அழித்திட முடியுமா? உங்கள் ஆட்சியில் பெருகி வரும் போதைக் கலாச்சாரத்தாலும், சட்டவிரோத குற்றங்களாலும் வெளியில் தலைகாட்டவே அஞ்சி ஒடுங்கும் தமிழகப் பெண்களின் கோபத்தனலை உங்கள் கோடைக்கால சிறப்பு பணம் தணித்து விடுமா?
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் வரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்கி வைத்து விட்டு, பின்பு தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் எனக் கூறி பாதிக்குப் பாதி பேரை புறந்தள்ளி விட்டு, தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் ஆளுக்கு ரூ. 5000 அள்ளிக் கொடுப்பதாக நீங்கள் போடும் தேர்தல் நாடகம் எங்களுக்கு தெரியாதா? அதிலும் நீங்கள் ஒன்றும் உங்கள் சொந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்பதையும் டாஸ்மாக் மூலம் மக்களிடம் இருந்து உறிஞ்சி எடுத்த பணத்தையே உங்கள் தேர்தல் நலனுக்காக நீங்கள் செலவிடுகிறீர்கள் என்பதையும் தமிழக மகளிர் நன்கு அறிவர். எனவே, நீங்கள் கொடுக்கும் பணத்தை தமிழக மகளிர் மனப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். ஆனால், அதற்காக உங்களைப் போன்ற ஒரு தீயசக்தியை தப்பித்தவறிக் கூட ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர வைக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் முதல்வரே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

