200 இடங்களில் வெல்வோம் என பேசி வந்த ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக ஏன் தடுமாற்றம்?- வானதி சீனிவாசன்
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது; 200 இடங்களில் வெல்வோம் என பேசி வந்த ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக ஏன் இந்த தடுமாற்றம்? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகங்களில் நேற்று வெளியிட்ட பதிவில், "அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்" என கூறியிருக்கிறார். இந்த பதிவின் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் பதற்றம் தெரிகிறது. திமுக கூட்டணி வலிமையாக உள்ளது; 200 இடங்களில் வெல்வோம் என பேசி வந்த ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக ஏன் இந்த தடுமாற்றம்?
1957ல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் திமுக, இதுவரை தனித்துப் போட்டியிட்டதே இல்லை. 1967ல் திமுகவுக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்ட மூதறிஞர் ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தே திமுக ஆட்சியைப் பிடித்தது. 1971ல் காங்கிரஸ் பிளவுபட்டதால், 1989ல் அ.தி.மு.க., பிளவுபட்டதால், 1996ல் காங்கிரஸ் பிளவுபட்டதால், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆதரவால், 2006ல் விஜயகாந்த் வாக்குகளை பிரித்ததால் தனிப்பெரும்பான்மை இல்லாததால், 2021ல் எதிர்க்கட்சிகள் பிரிந்ததால் என அரசியல் விபத்துகளால்தான் திமுக வென்றுள்ளது. ஒரு தேர்தலில் கூட தன் சொந்த பலத்தால் திமுக வென்றதில்லை. ஆனால், 1996ம் ஆண்டிலேயே தனித்துப் போட்டியிட்டு சட்டமன்றத்தில் நுழைந்த கட்சி பாஜக. 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகள் இல்லாமல் பாஜக அமைத்த கூட்டணி இரண்டு எம்பிக்களைப் பெற்றது. அத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்தது பூஜ்யம். திமுகவின் தேர்தல் வரலாறு இப்படி இருக்கும் போது பாஜகவை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் கட்டுப்பாட்டில் வைக்கும் வழக்கும் பாஜகவுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்ததும் தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து வந்தார். இப்போது அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வலிமை பெற்று விடுமோ என்ற அச்சத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பாஜக மீது வார்த்தைகள் அள்ளி தெளித்து வருகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது. அந்த பதற்றத்தில் ஏதேதோ பேசி வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

