ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது- வானதி சீனிவாசன்

 
vanathi vanathi

வாக்காளர் பட்டியலில் இருந்து அன்னிய ஊடுருவல்காரர்களை நீக்கினால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? இந்தியர்கள் 'இண்டி' கூட்டணிக்கு வாக்களிக்க மாடடார்கள் என்ற முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து விட்டாரா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வானதி

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள பீகார் மாநிலத்தில், சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, பீகாரில் மொத்தம் உள்ள 7 கோடியே 90 லட்சம் வாக்காளர்களில், 65 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஜனநாயகத்தை காக்க, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நியாயமான நடவடிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கம்போல தனது, வாக்கு வங்கி அரசியலுக்காக திசைதிருப்பியுள்ளார். பாஜகவுக்கு வாக்களிக்காத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இறந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக இருந்தவர்கள், இந்திய குடிமகன் என்பதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை தவறு என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறாரா? அண்டை நாடுகளில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டும் என்கிறாரா?ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? இந்தியாவுக்குள் ஊடுருவி வந்த அன்னியர்கள்தான் 'இண்டி' கூட்டணியின் வாக்காளர்களா? 18 வயது நிறைவடைந்த, இந்திய குடியுரிமை உள்ளவர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களை நீக்கவும் முடியாது.

“சில அமைச்சர்களை அனுப்பி அஜித்குமார் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகம்”- வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பல்வேறு தொகுதிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை கொத்து கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, குறுக்கு வழியில், தேர்தல் வெற்றியை திருடுபவர்கள், ஊடுருவல்காரர்களான அன்னிய நாட்டவர்களை நீக்கியதற்காக ஏன் பதற வேண்டும்? இந்தியர்கள் 'இண்டி' கூட்டணிக்கு வாக்களிக்க மாடடார்கள் என்ற முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து விட்டாரா?100 சதவீதம் உண்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.