“விசாரணையின் போது வலிப்பு” என நாடகம்! அஜித்குமார் மரணத்தை மறைக்க முயற்சி- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன் வானதி சீனிவாசன்

திருட்டு வழக்கில் விசாரிக்கும் முன்பு திரு. அஜித்குமாரின் மீது முறையாக FIR பதியப்பட்டதா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்/ Security Ajith  Kumar's death case transferred to CBCID

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித்குமாரின் மரணத்தை, “விசாரணையின் போது வலிப்பு” என நாடகமாடி  மூடி மறைத்து விட முயன்ற திமுக அரசின் உண்மை முகத்தினை மக்களுக்கு தோலுரித்து காட்டும் வகையில் ஒரு காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அதில் கையில் பிரம்புடன் பல காவலர்கள் சுற்றி நிற்க, அடித்து அடித்து உடைந்து போன பிரம்பை ஒருவர் இரண்டாக மடக்கி தாக்குகிறார். புழுதி படிந்த ஆடையுடன் அடிகளைத் தாங்கும் திராணியின்றி அப்பாவி திரு. அஜித்குமார் வலியில் துடிக்கிறார். காண்போரைக் கலங்க வைக்கும் இத்தகைய காட்சிகள், மக்களிடையே காவல்துறையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.



  
பாலியல் குற்றவாளிகளை எல்லாம் முழு மரியாதையுடன் நடத்துவது மட்டுமன்றி அவர்களை ஒரு வகையில் காப்பாற்றவும் துடிக்கும் தமிழகக் காவல்துறையினர், வெறும் நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை உயிர்போகும் அளவிற்கு மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? இத்தனைக்கும் ஒரு அனுமானத்தின் பேரில் தானே திரு. அஜித்குமார் விசாரிக்கப்பட்டார்? அதுவும் சட்டவிரோதமாக? திருட்டு வழக்கில் விசாரிக்கும் முன்பு திரு. அஜித்குமாரின் மீது முறையாக FIR பதியப்பட்டதா? ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவரை சட்டவிரோதமாக அடித்து துவைத்தால் யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்ற இளக்காரம் தானே இன்று ஒரு உயிரை காவு வாங்கியிருக்கிறது? திமுக ஆட்சியில் காவலர்களிடையே எதற்கு இத்தனை குரூரம்? ஆக, நமது மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியது போல, காவலர்களால் அநியாயமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட திரு. அஜித்குமாரின் அகால மரணத்திற்கு ஆளும் அறிவாலய அரசு தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தனது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தமிழகக் காவல்துறையினரைக் கட்டுப்படுத்தும் திறனற்ற திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும். இதுவே திரு. அஜித்குமாரின் ஆன்மா அமைதியடைவதற்கான ஒரே வழி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.