எந்த மொழியையும் மோடி அரசு திணிக்கவில்லை- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

புதிய நாடாளுமன்றத்தில் நம் தாய்த் தமிழ் ஆதினம் வழங்கிய செங்கோலை நிறுவியது தமிழுக்கும், தமிழ் மரபுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அளித்த பெரும் அங்கீகாரம் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மீது மாறா பற்று கொண்டவர். தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகள், வெளிநாடுகளிலும் தமிழர்களே இல்லாத அரங்குகளிலும், உலகின் தொன்மையான மொழி தமிழ் என பறைசாற்றியவர். திருக்குறளையும், மகாகவி பாரதியின் கவிதை வரிகளை உலக அரங்குகளில் முழங்கியவர். இதுவரை எந்த பிரதமரும் இப்படி நம் அன்னைத் தமிழுக்கு மகுடம் சூட்டியதில்லை. புதிய நாடாளுமன்றத்தில் நம் தாய்த் தமிழ் ஆதினம் வழங்கிய செங்கோலை நிறுவியது தமிழுக்கும், தமிழ் மரபுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அளித்த பெரும் அங்கீகாரம். செங்கோல் என்பது தமிழர்களின் அடையாளம். அதனால்தான், சில நாட்களுக்கு முன்பு நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளில்கூட செங்கோலை பரிசளித்தார்கள்.

இந்தியாவின் அலுவல் மொழி இந்தி. இணை அலுவல் மொழி ஆங்கிலம். நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்த இரு மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எந்த மொழியையும் மோடி அரசு திணிக்கவில்லை. இந்தி மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வால்கர் இதை பலமுறை வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்கள் பல கோடிக்கணக்கில் உள்ளனர். அந்த மொழியை ஆட்சி மொழியாக கொண்ட மாநில அரசுகள் உள்ளன. அந்தந்த மொழிகளின் வளர்ச்சிக்கு அந்தந்த மாநில அரசுகள் பெரும் நிதியை ஒதுக்குகின்றன. ஆனால், சமஸ்கிருதத்திற்கு என மாநில அரசுகள் அல்ல. அதை தாய்மொழியாக கொண்ட மக்களும் இல்லை. அதனால்தான், பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை பாதுகாக்க மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. இந்தப் புரிதல் இல்லாமல் பேசுபவர்களின் பின்னணியில் வெறும் வெறுப்பரசியல் மட்டுமே.


திருக்குறளில் இந்து தர்மத்தின் அடிப்படை கருத்துகள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. திருவள்ளுவரின் திருஉருவப் படம் ஆரம்ப காலகட்டங்களில் இந்து அடையாளத்துடனே இருந்தது. அதை மாற்றியது திமுக அரசுதான். எனவே, காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வரைவதில் எந்த தவறும் இல்லை. அந்த்யோதயா, தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்கள் தமிழ்நாட்டில் மட்டும் இயக்கப்படவில்லை. இந்தியா முழுமைக்கும் ஒடுகிறது. காங்கிரஸ் ஆட்சியிலும் ராஜ்தானி, சதாப்தி போன்ற பெயர்களில் நாடெங்கும் ரயில்கள் இயக்கப்பட்டதே அதுபோன்ற திட்டம் இது. தமிழகத்திற்கான தனி ரயில்களுக்கு தமிழில் தான் பெயர் வைக்கப்படும். தனது பெயரில் மட்டுமல்ல, கட்சி பெயர், கட்சி சின்னத்திலும் தமிழ் இல்லாத, குடும்ப நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைக்காத முதலமைச்சர் ஸ்டாலின் இதை சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.