"சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள் ஓடி ஒளிய முடியாது"- வானதி சீனிவாசன்

 
வானதி வானதி

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வரலாற்றில் அழியா கரும்புள்ளியாகப் பதிந்து போன அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக ஆதரவாளர் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, நீதியை நிலைநாட்டியுள்ள சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். பாதிக்கப்பட்ட அப்பெண்மணியின் கண்ணீருக்கும் மனக்குமுறல்களுக்கும் தக்க நியாயத்தை தேடி தந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன்!

"திமுகக்காரர்" என்ற அடைமொழியை குற்றம் செய்வதற்கான அடையாளமாகப் பயன்படுத்தி, அப்பாவிப் பெண்களின் வாழ்வை நாசமாக்கத் துணியும் கழக கண்மணிகளுக்கு இதுபோன்ற தீர்ப்புகள் சம்மட்டியடியாக எதிரொலிக்கும் என்பதிலும் இனி அரசியல் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி பெண்களை தவறான முறையில் நெருங்க துடிக்கும் கயவர்களுக்கு சட்டம் தனது பாணியில் பதிலடி கொடுக்கும் என்பதிலும் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள் ஓடி ஒளிய முடியாது! ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் சுய விவரங்களைப் பொதுவெளியில் பதிவிட்டு, பேசுபொருளாக்கி நீதியின் குரல்வளையை நெரித்துவிடலாம் எனவும் பொதுமேடையில் குற்றவாளியை "தம்பி" என்றழைத்து அதிகார பலத்தைக் காட்டி புகார்தாரரை பயமுறுத்தி விடலாம் எனவும் தப்புக்கணக்கு போட்டவர்கள் இன்று நீதியின் முன் நிராயுதபாணியாக நிற்கிறார்கள். மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளர்.