நிர்மலாவின் திறமையான, துணிச்சலான நடவடிக்கையால் ஜிஎஸ்டி வரி குறைப்பு சாத்தியமாகியுள்ளது- வானதி சீனிவாசன்
ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கையால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார்கள் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/fATdjMOoTd9oOtEifFAv.jpg)
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் பேசிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், "இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்" என அறிவித்திருந்தார். ஆனால், தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு தீபாவளி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில், 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி, 5 %, 18% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
வெண்ணெய், நெய், பன்னீர், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள், பிஸ்கெட், சாக்லெட்டுகள், உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி, மீன் தயாரிப்பு பொருட்கள், சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள், மினரல் வாட்டர், காலணி, ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உரங்கள், விதைகள் , உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான வரி ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை. எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் மீதான வரி 28 சதவீத்திலிருந்து 18 சதவீதாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அளவுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறை. இதனால் அத்தியாவசியப் பொருட்களும், நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களும் விலை குறையும். இதனால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள். ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை. இதனால் மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்குவார்கள். வணிகம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடி. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பேரிடரிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை பாதுகாத்தவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரது திறமையான, துணிச்சலான நடவடிக்கையால் ஜிஎஸ்டி வரி குறைப்பு சாத்தியமாகியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார்கள்” எனக் கூறியுள்ளார்.


