ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகி விட்டதா?- வானதி சீனிவாசன்

முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகி விட்டதா என்ன? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் 8ஆம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சக மாணவனை வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “நெல்லையில் வகுப்பறையில் வைத்தே சகமாணவனையும் ஆசிரியரையும் எட்டாம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதற்காகவே பள்ளிக்குழந்தைகளின் புத்தகப்பையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ளபோதும் இந்த வன்முறை நிகழ்ந்தது எவ்வாறு?
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகி விட்டதா என்ன? தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் பள்ளிக்கூடங்களை வன்முறைக்கூடங்களாக மாற்றிவருவது தான் திராவிட மாடல் பள்ளிக்கல்வித்துறையின் சாதனையோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. இனிமேலும் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் திமுக அரசு உடனடியாக தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் அதனை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.