திமுக- பாஜக கூட்டணியா?- வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை,எதிரியும் இல்லை என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை,எதிரியும் இல்லை. திமுகவுடன் கூட்டணி உருவானால் அறிவிப்பார்கள். அது உருவாகும் முன்னாடியே நீங்களே உருவாக்கிவிட்டது போல இருக்கிறது” என்றார்.
முன்னதாக தொகுதி மறுவரையறை தொடர்பான விமர்சனங்கள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் வேண்டும் என்பதே திமுகவின் நீண்டகால நிலைப்பாடு. தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். அரசியலில் நிரந்தர எதிரி அல்லது நண்பர் என்று யாரையும் கூற முடியாது. தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ, அது எந்த தரப்பிலிருந்து வந்தாலும் திமுக அதை ஆதரிக்கும். தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

