“மாநில தலைவர் வாய்ப்புகளை தவற விட்டுவிட்டோம், ஏமாற்றம் என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட இல்லை”- வானதி சீனிவாசன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேலை 2026 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைப்பதுதான், கூட்டணி ஆட்சி அமைப்பது என்பது குறித்து எங்கள் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை இந்திய உணவு கழக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். வானதி சீனிவாசனுடன் மாநில துணை தலைவர் கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “அம்பேத்கரின் சிலைகள் இருக்கும் இடங்களில் பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்தி கொண்டு இருக்கின்றனர். நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. 15-ம் தேதியில் இருந்து 25-ம் தேதிக்குள் கட்சியின் மாவட்டங்களில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட இருக்கின்றது.
ஓவ்வொரு முறையும் கோவை நகருக்கு 200 கோடி கொடுத்திருப்பதாக அமைச்சர்கள் சொல்கின்றனர், ஆனால் எங்கும் சாலை வேலைகள் நடப்பதாக தெரியவில்லை. தேர்தலுக்காக வேலை செய்யாமல் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நயினார் நாகேந்திரன் பதவியேற்று 24 மணி நேரம்தான் ஆகிறது. மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தேர்தல் அரசியல், கட்சி பணி என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து செயல்பட்டு இருக்கிறார். பாஜகவில் தலைமை பொறுப்பு என்பது, வரிசையில் முன் நிற்ககூடிய நபர் தலைவர். மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர். பாரதிய ஜனதா கட்சி விரிவு படுகின்ற பொழுது, கட்சியிலே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வருவதும், அவர்களுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கி அவர்களது செயல்பாட்டை பார்ப்பதும் தமிழகத்தில்மட்டுமல்ல பல்வேறு மாநலங்களில் நடைபெறுகின்றது.
நயினார் நகேந்திரன் தலைமை என்பது புதிய நபர்களை கட்சிக்குள்ளாக கொண்டு வரும், அவரது செயல்பாட்டின் மூலம் புதிய விஷயங்கள் கட்சிக்கு கிடைக்கும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக மாநில தலைவராக பொறுப்பேற்று இருப்பது நல்ல விஷயமாக பார்க்கின்றோம். இந்தி தெரியாத ஒரு பெண்மணியான என்னை தேசிய மகளிர் அணி தலைவராக்கி இருக்கின்றனர். மத்திய தேர்தல் குழுவிலும் எனக்கு இடம் கொடுத்து இருக்கின்றனர். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து கட்சி பொறுப்புகள் கொடுக்கப்படும். அதனால் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம் என்றில்லை, இதை விட வேறு வாய்ப்புகளை கட்சி கொடுத்து இருக்கின்றது. எம்.எல்.ஏ வாகவும் ஆக்கி இருக்கின்றது, எங்களை பொறுத்த வரையில் தமிழகத்தில் பா.ஜ.க வளர வேண்டும் என்பதுதான் , மாநில தலைவர் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம், ஏமாற்றம் என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட இல்லை” என்றார்.