"கொஞ்ச நாள் போனா என் அலுவலகத்துல கஞ்சா விற்கிறேன்னு சொல்லுவாங்க" - வானதி சீனிவாசன்

 
வானதி

சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சனைகளை கவனிக்காமல், சமூக வலைதளங்களில் பேசுபவர்களை கைது செய்வதில் திமுக அரசு அக்கறை காட்டுவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சனைகளை கவனிக்காமல், சமூக வலைதளங்களில் பேசுபவர்களை கைது செய்வதில் திமுக அரசு அக்கறை காட்டுகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம், மதுபானம் உட்பட அனைத்தையும் திமுக அரசு விலை உயர்த்தி விட்டது. பெண்களை பற்றி அவதூறாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது என்றால், திமுகவில் பாதி பேரை கைது செய்திருக்க வேண்டும். பெண்கள் குறித்து மிக மோசமான விமர்சனங்களை திமுகவினர் பேசியுள்ளனர். சமூக ஊடகங்களில் திமுக ஐடிவிங்கும் திமுகவைச் சார்ந்த நபர்களும் பெண்களை எவ்வளவு கொச்சையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது என்ன திடீர் பெண்களின் காவலராக மாறி இருக்கின்றனர். சவுக்கு சங்கர் விவகாரத்தில் பழைய நடைமுறையையே தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. கஞ்சா கேஸ் போடுவது பழைய நடைமுறை


தங்கள் அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை திமுக கைவிட வேண்டும். MLA அலுவலகத்தை திறக்காமல் விட்டால் பாட்டில்களுடன் சமூக விரோதிகள் உள்ளே வந்துவிடுகிறார்கள். என்னோட சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படாததால் டாஸ்மாக் பார் ஆக மாறியுள்ளது. இன்னும் சில நாட்களில் கஞ்சா விற்கிறேன் என சொன்னாலும் சொல்வார்கள்” என்றார்.