ஒரே பொய்யை விடாது பரப்பினால் மக்கள் நம்பிவிடுவார்களா?- மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

தமிழக மக்கள் நலனை மதிக்காது முழு சுயநலத்தோடு செயல்படுவது நீங்கள் தானே தவிர, பாஜக-வினர் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே பொய்யை விடாது பரப்பினால் மக்கள் நம்பிவிடுவார்களா திரு. மு.க.ஸ்டாலின்? தங்கள் ஆட்சியின் அவலட்சணத்தை மறைக்கவும், நிர்வாகத் தோல்வியிலிருந்து தப்பிக்கவும் காலங்காலமாக திமுக கையாண்டு வரும் உத்திதான், இந்த திடீர் மொழிப்பற்று, கலாச்சாரக் கரிசனம் என்பதை தமிழக மக்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டார்கள் முதல்வரே. ஆக, நீங்கள் வீராப்பு வசனம் பேசி மக்களிடையே வெறுப்பை விதைக்க நினைப்பதெல்லாம் வீண் முயற்சிதான். மேலும், மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை அற்ப அரசியல் காரணங்களுக்காக மழுங்கடிக்கத் துடிக்கும் திமுக-வின் எம்.பிக்களைத் தான் நமது மத்திய அமைச்சர் விமர்சித்தார் என்பதையும், அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார் என்பதையும் சற்று நீங்கள் சிந்தையில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரே பொய்யை விடாது பரப்பினால் மக்கள் நம்பிவிடுவார்களா திரு. @mkstalin?
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 11, 2025
தங்கள் ஆட்சியின் அவலட்சணத்தை மறைக்கவும், நிர்வாகத் தோல்வியிலிருந்து தப்பிக்கவும் காலங்காலமாக @arivalayam கையாண்டு வரும் உத்திதான், இந்த திடீர் மொழிப்பற்று, கலாச்சாரக் கரிசனம் என்பதை தமிழக மக்கள் எப்போதோ… https://t.co/13JY0Br0QC
அடுத்தபடியாக, PM SHRI பள்ளிகளை செயல்படுத்த ஆர்வமாக இருப்பதாக மத்திய அரசுக்கு உங்கள் அதிகாரி எழுதிய கடிதத்தைப் பற்றிப் பேசாமல், நமது தேசிய கல்விக் கொள்கையில் “ஹிந்தி மொழி கட்டாயம்” என எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற எங்களின் கேள்விக்கும் விடை கூறாமல், மத்திய கல்வி அமைச்சர் மீது தேவையற்ற பொய் பரப்புரைகளைப் பரப்புவதில் மட்டும் இத்தனை அவசரப்பட்டு, நீங்களே உங்கள் இரட்டைவேடத்தை படம் போட்டு மக்களுக்கு காண்பித்துவிட்டீர்கள். மேலும், தமிழக மக்கள் நலனை மதிக்காது முழு சுயநலத்தோடு செயல்படுவது நீங்கள் தானே தவிர, பாஜக-வினர் இல்லை. சொல்லப்போனால் நமது மோடி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தான் தமிழக மக்களுக்கு சிறந்த திட்டங்கள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றுகள் பல உண்டு. ஆகவே, மென்மேலும் தேவையற்ற பொய்களை அடுக்கி உங்கள் பதவிக்குண்டான மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்ள வேண்டாமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.