ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் ட்ரோல்- தமிழிசை கண்டனம்
ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் Troll-களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு இளம் பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் குறிவைத்து நடத்தப்படும் Troll-களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகளும், கொள்கை முரண்பாடுகளும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை காயப்படுத்துவதற்கான காரணமாக ஒருபோதும் மாறக்கூடாது. தன்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்லவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது பொன்னான நேரத்தை செலவிட வேண்டிய நிலை மிகவும் வேதனையானது. இத்தகைய Troll-கள் ஒரு பெண்ணின் மன அமைதியையும், தன்னம்பிக்கையையும், கவனத்தையும் பாதிக்கலாம். அவர் தனது பொறுப்பில் கவனம் செலுத்தி மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் சக்தியையும் இவை பறித்துவிடுகின்றன.
அதே நேரத்தில், நான் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
நான் ஒரு அசைக்க முடியாத BJP பெண் தலைவர். என் கொள்கையிலும், என் கட்சியிலும் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக நான் குரல் கொடுத்தால், உடனே என்னை “A Team”, “B Team” என்று கூறி Troll செய்ய வேண்டாம். நானும் இத்தகைய Troll-களை எதிர்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அவற்றால் நான் அசைந்து போகவில்லை. இன்னும் உறுதியுடன், இன்னும் நம்பிக்கையுடன் நிற்கிறேன். ஒரு பெண்ணின் கண்ணியத்திற்காக குரல் கொடுப்பது எந்த “Team”-ஐச் சேர்ந்தது என்பதல்ல. அது மனிதநேயத்தின் அடையாளம். ஒரு பெண் அரசியல்வாதியை எதிர்க்க விரும்பினால்—அரசியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள்.... அவரது கொள்கைகளை கேள்வி கேளுங்கள். அவரது செயல்பாடுகளை விமர்சியுங்கள். அவரது கருத்துகளுக்கு உண்மையான தரவுகளாலும், வலுவான வாதங்களாலும் பதிலளியுங்கள். அரசியலை அரசியலால் எதிர்கொள்ளுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். உண்மைக்கு உண்மையால் பதிலளியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தாதீர்கள். Troll-கள் எத்தனை வந்தாலும், நாங்கள் பெண்கள் அசைந்து போக மாட்டோம். அஞ்ச மாட்டோம். அமைதியாக பின்வாங்க மாட்டோம். உறுதியுடன் நிற்போம். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்... என்ற உறுதிப்பாட்டை பெண் தலைவர்கள் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

