“திமுகவை ஓட ஓட விரட்டுகிறார் முதல்வர் விஜய்”- தமிழிசை

 
Tamilisai Soundararajan

முதல்வர் விஜய் தி.மு.கவின் ஊழலை சொல்லி ஓட ஓட விரட்டி இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன், “திமுக செய்த ஊழல்களைச் சொல்லி, ஓட ஓட முதலமைச்சர் விஜய் விரட்டுகிறார். ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் இதுபோன்ற ஊழல்கள் நடைபெறக்கூடாது. வீராணத்தில் ஆரம்பித்து, சர்க்காரியா கமிஷன் வரை, விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து முன்னுக்கு வந்தவர்கள் திமுகவினர். ஆதாரப்பூர்வமாக ஊழல்களை முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்தி வருகிறார். வெளிநடப்பு கூட செய்ய முடியாமல் தி.மு.கவினர் தர்ணா செய்து கொண்டிருந்தார்கள்.. ஏனென்றால் வெளிநடப்பு செய்தால் யார் ஓடினார்கள் என்று வந்துவிடும் அல்லவா..? ஊழலைப் பேசும் தவெக, குதிரைப் பேரத்தையும் கட்டுப்படுத்தினால்தான் உண்மையான ஊழலுக்கு எதிரானவர்கள் என மக்கள் நம்புவார்கள். எந்த ஒரு கட்சியும் ஊழலில் ஈடுபடக்கூடாது என்பதற்கு இது ஒரு பாடம். அவர்கள் ஊழலில் ஈடுபட்டால், அது கண்டிப்பாக அம்பலமாகும். அதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்றார்.