“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது”- தமிழிசை

 
தமிழிசை

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழிசை

கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு பா.ஜனதா தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார். அப்போது கடலூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பால புதியவன் என்கிற வினோத் குமார் என்பவர் தமிழிசை செளந்தரராஜன் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்து ஆபாச கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜனதா முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 22.10.2017 அன்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பால புதியவனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்ரீ வர்ஷா முன்னிலையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஆபாச பதிவுகளில் முகநூலில் பதிந்து வருவது வழக்கமாக இருக்கிறது. இதனை அந்த கட்சி தலைவர்கள் கண்டிப்பது கிடையாது. மேலும் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இணையத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது, தரையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.  பல்கலைக்கழகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.  பல்கலைக்கழகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து உள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது செய்தியாளர்கள் பாஜகவினரும் ஆபாச பதிவுகள் நிறைய செய்வதாக தெரிவித்த போது பாஜகவினர் செய்தியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கவும் முயற்சி செய்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்தனர். அதன் பிறகு பாஜகவினரை சமாதானம் படுத்திய தமிழிசை சௌந்தரராஜன், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்கள் குறித்து ஆபாச பதிவுகள் செய்து செய்வது தவறு என்று தெரிவித்தார்.