தமிழகத்தில் இரட்டை இலையுடன் கூடிய தாமரை மலர்ந்தே தீரும்- தமிழிசை
தமிழகத்தில் நடைபெற்று வரும் கோவில் குடமுழுக்கு விழாக்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழக முதல்வர் மற்ற மதங்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது போல் கோவில் குடமுழுக்கு விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

சோளிங்கர் ஶ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “சோளிங்கர் பகுதியில் யோகா ஆஞ்சநேயர் கோவில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் தற்போது அனைத்து கோவில்களிலும் குடமுழக்கு விழாக்கள் நடைபெற்று வருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தமிழக முதல்வர் மற்ற மதங்களில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதே போன்று கோவில் குடமுழக்க விழாக்களிலும் அவர் பங்கேற்க வேண்டும். வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழக்க விழாவில் நான் பங்கேற்றத்தில் எந்த முன்னுரிமையும் கோரவில்லை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் முன்னுரிமை வழங்கவில்லை என முரண்பாடான தகவல்கள் வெளியே பரவுவது மனவேதனை அளிக்கிறது. பக்தர்களோடு பக்தர்களாக சென்று நான் சாமி தரிசனம் மேற்கொண்டேன்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது துவங்கப்பட்டுள்ள பிரச்சார பயணத்திற்கு வாழ்த்துக்கள். பாஜக தொண்டர்கள் அனைவரும் அவரை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்க இருக்கின்றனர். மேலும் பாஜக கூட்டணியில் நிச்சயமாக குளத்தில் இலையுடன் கூடிய தாமரை மலர்ந்தே தீரும். பிரதமர் நரேந்திர மோடி உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் எனசெல்லும் கோவிலில் எல்லாம் அவரது பெயர் மற்றும் அனுஷ நட்சத்திரத்தை குறிப்பிட்டு பூஜை செய்கிறேன்” என்றார்.


