“விஜய் களத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி... அவர் இன்னும் கடுமையாக திமுகவை எதிர்க்க வேண்டும்”- தமிழிசை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வொர்க் ப்ரம் ஹோமில் இருந்து ஒர்க் ப்ரம் பீல்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு நாம் எல்லோரும் மனம் வருந்தி நின்று கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம் என் தந்தை ஆன்மா சாந்தியடைய காசி சென்றிருந்தேன். அப்போது உயிரிழந்த மக்களுக்காகவும் வேண்டிக் கொண்டேன். இந்த நேரத்தில் பாரத பிரதமருக்கு நாம் வலு சேர்க்க வேண்டும். இந்த சம்பவத்தில் விமர்சிக்க கூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்தால் அவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள், விமர்சிப்பவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. நாட்டிற்காக பாஜகவோடு மற்ற கட்சிகள் இணைந்திருப்பது நல்லது, அது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நேற்று நடந்துள்ளது, விஜய் களத்திற்கு இறங்கி வந்திருப்பது மகிழ்ச்சி. காணொளியிலிருந்து கொண்டு வொர்க் பிரம் ஹோமில் இல்லாமல் ஒர்க் ப்ரம் பீல்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. விஜய் இன்னும் கடுமையாக ஆளுகின்ற திமுகவை எதிர்க்க வேண்டும். தம்பி விஜய் கட்சிக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் சம்பிரதாயத்திற்கு விஜய் பாஜகவை எதிர்க்க வேண்டும் என எதிர்க்காமல் முழு எதிர்ப்பையும் திமுக கூட்டணியிடம் காட்ட வேண்டும் என்பது எனது கருத்து. இன்னொரு வேண்டுகோள் என்னவென்றால் வாக்கு அளிக்கும் வயது அல்லாதவர்கள் கூட அங்கே நிறைய பேர் காணப்பட்டார்கள் , குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது.

திமுக ஆட்சியில் அமைச்சரவை கூட்டம் சிறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. திமுகவினர் ஒவ்வொருத்தரின் பெயரிலும் பல வழக்குகள் உள்ளது. இப்படி உள்ள திமுகவினர் எங்களை பார்த்து கூடா நட்பு என தெரிவிக்கிறார்கள், எங்களைப் பார்த்து கூடா நட்பு என தெரிவிக்கபவர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன், திமுக கூட்டணி மக்களால் தேடாக் கூட்டணியாக மாறப்போகிறது. 2026 இல் களம் எப்படி இருந்தாலும் மத்தியில் பலமாக ஆளும் பாஜக கட்சியும், இதற்கு முன்னால் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்த அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். சிறப்பான கூட்டணியாக ஆட்சியைப் பிடிப்போம். காஷ்மீர் பிரச்சினை பரிவினையை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டால் பரவாயில்லை, பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.


