"கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சர் நாடகம்"- தமிழிசை சௌந்தரராஜன்

கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து கூறியுள்ளார்.
கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுகவின் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானம் குறித்து கருத்து கூறியுள்ள தமிழிசை செளந்தரராஜன், “கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார். கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது? இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த கச்சத்தீவை தாரை வாரத்தது நீங்கள் தானே. அதை மீட்டெடுப்பதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்? நீட் தேர்வில் விலக்கு பெற முடியாது என்று தெரிந்தும் திமுக பொய் கூறி வருகிறது” எனக் குற்றம்சாட்டினார். மீண்டும் பாஜக மாநில தலைவராக வருவீர்களா? என்ற கேள்விக்கு,
அதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.